
இலங்கையில் தனித்தனியாக சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் – அதிகாரிகள் கோரிக்கை
தனித் தனியாக சிகரெட்டுகளை விற்பனை செய்வதைத தடை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் (NATA) அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் இது குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, உலகெங்கிலும் உள்ள 104 நாடுகள் தனித் தனியாக சிகரெட்டுகளை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இலங்கையில் இதேபோன்ற சட்டம் முக்கியமானது என புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தனித்தனியாக சிகரெட்டுகள் விற்பனை செய்யும் போது, சிகரெட் பெட்டிகளில் காட்டப்படும் சுகாதார எச்சரிக்கைகளை நுகர்வோர் பார்க்க முடியாது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
புகையிலை மற்றும் மதுபானம் உட்கொள்வதால் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழக்கின்றனர்.
இதனால், நாட்டிற்கு ஆண்டுக்கு 225-240 பில்லியன் ரூபா பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று அதிகாரசபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சூழ்நிலையை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு தேவையான சட்ட விதிகளைச் சேர்க்க தேசிய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிகரெட்டுகளின் விலையை நிர்ணயித்த பின்னர் வரிகளை விதிப்பதன் முக்கியத்துவத்தையும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
எவ்வாறாயினும், தனித் தனியாக சிகரெட்டுகளின் விற்பனையை தடை செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
