
வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது
பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை தீவிரமடைந்து வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி காலை 7.55 மணி நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் நான்கு சதவீதம் உயர்ந்து 5,555.10 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி முதல் முறையாக தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர்களை கடந்திருந்தது. இந்நிலையில், நான்கு நாட்களில் மீளவும் 500 டொலர் விலை அதிகரித்துள்ளது.
ஜனவரி 28 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானை வலியுறுத்திய நிலையில், புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
2026ஆம் ஆண்டு இதுவரையில் தங்கத்தின் விலை 25 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 64 வீதம் அதிகரித்திருந்ததாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, கடந்த 26ஆம் திகதி 117.69 அமெரிக்க டொலர் என்ற சாதனை அளவை எட்டிய பின்னர், ஸ்பாட் வெள்ளி ஒரு அவுன்ஸ் விலை 116.61 அமெரிக்க டொலர்களில் நிலையாக பதிவாகியுள்ளது.
மேலும், ஒரு அவுன்ஸ் ஸ்பாட் பிளாட்டினம் விலை 0.4 வீதம் அதிகரித்து 2,918.80 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. பல்லேடியம் 0.3 சதவீதம் உயர்ந்து 2,079.32 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
