
பெற்றோரின் பொருளாதார நிலை பிள்ளைகளின் கல்வியைத் தீர்மானிக்கக் கூடாது – பிரதமர்
இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்கு நுழையும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிள்ளையினதும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதாக அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை செல்லும் முதல் நாள் என்பது பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு பசுமையான நினைவாக அமைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ள பிரதமர், அதற்கேற்ப கற்றல் – கற்பித்தல் செயல்முறையை மகிழ்ச்சிகரமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக, மாணவர்களின் புத்தகப் பையின் சுமையைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், அவர்கள் எதிர்கால உலகிற்குப் பொருத்தமான அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதில் எவ்விதக் குறைபாடும் ஏற்படாத வகையில், அவர்களை ஒரு முழுமையான பிரஜையாக உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பெற்றோர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், ஒரு வளமான நாட்டில் பிள்ளைகளுக்கு வளமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதே தமது இலக்கு எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நெகிழ்வுத்தன்மை மிக்க மற்றும் சிநேகபூர்வமான அணுகுமுறையுடன், பிள்ளைகளை வகுப்பறையில் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும், இந்த நேர்மையான முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரதும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “தாயின் மடியிலிருந்து விலகி, ஆசிரியர் எனும் பெற்றோரின் அரவணைப்புக்குள் நுழையும் அனைத்துப் பிள்ளைகளினதும் எதிர்காலம் சிறக்க வேண்டும்” என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மனதாரக் குறிப்பிட்டுள்ளார்
