
மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் நேற்று (27) மாலை உணர்ச்சிப்பூர்வமான தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை நினைவுகூரும் ‘கறுப்பு ஜனவரி’ மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கலந்துகொண்டவர்கள் தீப்பந்தங்களை ஏந்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்கு”, “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?”, “ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் உள்ளகப் பொறிமுறையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்
இந்தப் போராட்டத்தின் போது, அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என ஊடக அமைப்புகள் இதன்போது உறுதிபடத் தெரிவித்தன.
