
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் நாளை சீனா பயணம்
பிரதமர் கீர் ஸ்டார்மர், நாளை ஜனவரி 28ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் சீனாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே, பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
2018ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு இங்கிலாந்து பிரதமர் சீனாவுக்கு செல்லும் முதல் விஜயம் என்பதால், இந்தப் பயணம் சர்வதேச அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இப்பயணத்தின் போது, சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கீர் ஸ்டார்மர் சந்திப்புகளை நடத்தவுள்ளதுடன், இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணம் இருநாட்டு உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என அரசாங்கம் கூறியுள்ளது.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிப் போர் நடவடிக்கைகள் காரணமாக, மேற்குலக நாடுகள் புதிய சந்தை வாய்ப்புகளை தேடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதன் பின்னணியில், கனடா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றன. இதே சூழலில், இங்கிலாந்தும் தனது இராஜதந்திர நகர்வுகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இந்த இராஜதந்திர நகர்வில் பிரதமரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என பிரித்தானி பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்நகர்வு, அமெரிக்கா–இங்கிலாந்து இடையிலான பாரம்பரிய கூட்டணியில் ஒரு வகையான விரிசலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, இங்கிலாந்து பிரதமரின் சீனப் பயணம் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் கூர்ந்த கவனத்துடன் கண்காணிக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
