
தமிழர்களின் பூர்வீக நிலத்தை பறிக்க முயற்சிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை
நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பினால் கிவுல் ஓயாத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுமாறு அரசாங்கத்திடம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
மகாவலி எல் வலயத்தை உள்ளடக்கி புதிதாக நிர்மாணிக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்தை ஏற்கனவே இருந்த அரசுகளும் முன்னெடுத்திருந்தன. தற்போதைய அரசும் அதே தீர்மானத்தைதான் எடுத்துள்ளது.
தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து அரச அனுசரணையுடன் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துவதையும், வடக்கு – கிழக்கு நிலத் தொடர்பை நிரந்தரமாகப் பிரிக்கும் உள்நோக்கத்தையும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர்கள் தமது சொந்த பிரதேசத்திலேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டதே இந்த கிவுல் ஓயாத் திட்டம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேசத்தையும், முல்லைத்தீவு – மணலாறு பிரதேசத்தையும் உள்ளடக்கக்கூடிய வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்வேறுபட்ட குளங்கள், வயல்களை உள்ளடக்கி ஏற்கனவே மணலாற்றுப் பிரதேசத்தை சிங்களமயமாக்கி அதற்கு வெலிஓயா என்று பெயரும் சூட்டப்பட்டு பின்னர் வெளிநாட்டிலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அது மகாவலி ‘டு’ வலயம் என்று பெயர் சூட்டப்பட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த மகாவலி ‘டு’ வலயத்துக்கு எந்தக் காலத்திலும் மகாவலி நீர் வரமாட்டாது என்பதை மகாவலி அதிகார சபையின் உயர் அதிகாரிகளே நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.
யுத்தத்தின் பின்னர், இதனை ஒட்டிய பிரதேசங்களில் உள்ள கொக்கச்சான்குளம் என்ற கிராமம் போகஸ்வெவ என்றும், அதனையொட்டி மற்றொரு கிராமத்துக்கு நாமல்புர என்று பெயரும் சூட்டப்பட்டு அம்பாந்தோட்டை, மாத்தளை போன்ற தூரத்திலிலுள்ள சிங்களப் பிரதேசங்களிலிருந்து சிங்கள மக்கள் அழைத்துவரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவரும் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறிய குளங்களும், அதனை ஒட்டிய வயல் நிலங்களும், வவுனியா வடக்கில் உள்ள பல பழந்தமிழ் கிராமங்களும், அதன் குளங்களும், வயல் நிலங்களும் கிவுல் ஓயாவின் நீரேந்தும் பிரதேசத்துக்குள் மூழ்கடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து சிறுகச்சிறுக தமது விவசாயத்தை மேற்கொண்டு வரும் தமிழ் மக்களை மீண்டும் விரட்டியடிக்கும் நிலை தோன்றியுள்ளதால் அரசியல் உள்நோக்கம் கொண்ட இத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளளார்.
