
ஐசிசியின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவிப்பு
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை இணைத்துக்கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகளின் கூட்டத்திற்குப் பின்னர் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடருக்கு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மறுப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவுக்கு வெளியே போட்டிகளில் விளையாடும் பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்து, போட்டி அட்டவணையை மாற்றப்போவதில்லை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
மேலும், இறுதி முடிவை எடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை பங்களாதேஷ் தரப்பிற்கு வழங்கியது.
எவ்வாறாயினும், இந்தியாவில் விளையாட போவதில்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
இதன்படி, இந்த ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் இருந்து பங்களாதேஷ் அணியை நீக்கியதுடன் ஸ்காட்லாந்து அணியை இணைத்து சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
