
T20 உலக கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் வெளியேற்றம் – ஸ்கொட்லாந்து அணிக்கு வாய்ப்பு
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி இத்தொடரில் பங்கேற்பதை சர்வதேச கிரிக்கட் சபை (ICC) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க பாதுகாப்பு காரணங்களைக் கூறி பங்களாதேஷ் மறுப்புத் தெரிவித்திருந்தது.
போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐசிசி நிராகரித்த நிலையில், தற்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐசிசி தரவரிசையின் அடிப்படையில், தகுதி பெறாத அணிகளில் முன்னிலையில் இருந்த ஸ்கொட்லாந்து அணிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து அணி இப்போது குழு ‘C’ இல் இடம்பெறும். இதன்படி, அந்த அணி இத்தாலி, நேபாளம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும்.
ஸ்கொட்லாந்து அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
