
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதனை எதிர்க்கட்சி மறந்துவிட்டதா என பிரதமர் கேள்வி
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்பதற்காகவே உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த நான் சுவிட்ஸர்லாந்தில் இருந்து அவசரமாக நாடு திரும்பியுள்ளதாகவும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,
“எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
“நீங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரத் தேவையில்லை. பிரதமர் மாற வேண்டும் என இந்நாட்டு மக்கள் தீர்மானித்தால். நாங்கள் வீட்டுக்குச் செல்லவும் தயார். நாங்கள் இந்நாட்டு மக்களுக்கே பொறுப்புக்குரியவர்கள். அதற்கமைய நாங்கள் செயற்படுவோம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தரம் 6 இற்கான பாடநூல் புத்தக விவகாரம் மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்பில் காணப்படும் குறைப்பாடுகளை வலியுறுத்தி பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவரும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தனர்.
இதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்துகளை திரட்டிய முன்மொழிவையும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கையளித்தனர்.
என்றாலும், கல்வி மறுசீரமைப்பு பணிகளை 2027ஆம் ஆண்டுவரை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் காரணமாக இந்த நடவடிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கியுள்ள பின்புலத்திலேயே பிரதமர் ஹரிணி அமரசூரிய, இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
