கைதான அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்

கைதான அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட, எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4 கோடியே 60 இலட்சம் ரூபா பணத்தை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பில், அவரை இன்று காலை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு கைது செய்தது.

குறித்த ஆணைக்குழுவினால் அவரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சமர்ப்பணங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி, 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய தமது ஆணைக்குழு இந்த விசாரணையை ஆரம்பித்ததாகத் தெரிவித்தார்.

அதன் பின்னர் 2026 ஆம் ஆண்டு வரை அவ்வப்போது இந்த சந்தேகநபரின் வாக்குமூலங்கள், சத்தியக் கடதாசிகள் மற்றும் ஆவணங்களை வரவழைத்து விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், தனது சட்டபூர்வ வருமானத்தை விட 46 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்தார்.

அதற்கமைய, இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும் அவர் கூறினார்.

சந்தேகநபர் குறிப்பிடுவதைப் போல 11 மில்லியன் ரூபா பணம் கிடைத்த விதத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை எனக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, அப்பணத்தை தனது மனைவியின் சகோதரியும் சகோதரர் ஒருவரும் வழங்கியதாக அவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதில் 3 மில்லியன் ரூபாவை சந்தேகநபரின் சகோதரி ஒருவர் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சகோதரியிடம் வினவியபோது, காணி ஒன்றை விற்று அப்பணத்தை சந்தேகநபருக்கு வழங்கியதாகக் கூறிய போதிலும், விற்கப்பட்ட காணி அமைந்துள்ள இடத்தை வெளிப்படுத்த அவர்கள் மறுத்துவிட்டனர்.

அத்துடன், மேலும் 8 மில்லியன் ரூபா பணத்தை சகோதரர் ஒருவர் வழங்கியதாக சந்தேகநபர் தெரிவித்த போதிலும், அப்பணம் கிடைத்த விதத்தை தெளிவுபடுத்த அவர் தவறியுள்ளதாகவும் உரிய அதிகாரி குறிப்பிட்டார்.

இந்த சந்தேகநபர் உரிய பணத்தை ஈட்டிய விதத்தை தெளிவுபடுத்தத் தவறியுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் மனைவி, அவரின் சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி அறிவித்தார்.

இந்த சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டால் குறித்த சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காஞ்சன ரத்வத்தே நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், தனது கட்சிக்காரர் விசாரணைகளுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.

இந்த விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களை சுமார் 11 வருடங்களுக்கு முன்னரே சந்தேகநபர் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாகவும், சந்தேகநபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சந்தேகநபரின் வருவாய் ஈட்டல் தொடர்பான ஆவணம் ஒன்றையும் இன்று (23) சட்டத்தரணி திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதற்கமைய, இந்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதற்குப் போதுமான காரணிகள் முன்வைக்கப்படவில்லை என்பதால், அவரைப் பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், இந்த சந்தேகநபர் விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

இந்த சந்தேகநபரின் செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது அவர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான சாத்தியம் காணப்படுவதால், இது பிணை வழங்கக்கூடிய குற்றமாக இருந்தாலும் அவரது பிணைக் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்த நீதவான், அவரை எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், விசாரணைகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )