
ரொனால்டோவின் சிலைக்கு தீவைத்த நபர் கைது!
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வெண்கல சிலையை எரித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொனால்டோவின் சொந்த ஊரான ஃபஞ்சலில் உள்ள ரொனால்டோ அருங்காட்சியகத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த சிலையே இவ்வாறு தீவைத்து எரிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
“கடவுளின் இறுதி எச்சரிக்கை” என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த காணொளியில், நபர் ஒருவர் ரொனால்டோவின் சிலையின் மீது எரியக்கூடிய திரவத்தை ஊற்றி பின்னர் தீ வைத்துள்ளார்.
சிலை எரியும் போது அந்த நபர் ராப் இசைக்கு நடனமாடுவதையும் காணலாம்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ரொனால்டோ ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. புகழுக்காக இதுபோன்ற செயலைச் செய்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எவ்வாறாயினும், அந்நாட்டு பொலிஸார் இந்த சம்பவத்தை விசாரித்து சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர். சந்தேகநபர் இதற்கு முன்பும் இதே போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக உள்ளடக்கத்திற்காக சட்டவிரோதமான செயல்களைச் செய்வது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தக் கைது சான்றாகும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
