
கொழும்பு மாநகர முறைகேடுகள், ஊழல்களை அறிவிக்கவும் – பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை கோருகிறது ஆணைக்குழு
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயல்கள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மீறல், அதிகாரம், அரசாங்க வளங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள், நியமனங்கள் மற்றும் கொள்முதல் வழிகாட்டல்களை மீறுதல், அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள், முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்கு நடவடிக்கைகள் மற்றும் இணக்கப்பாடுகள், மேற்கூறிய செயல்களால் அரசாங்கத்தின் சொத்துக்கள் அல்லது வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டங்கள் மற்றும் சேதங்கள் குறித்துக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்காக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 02 ஆம் பிரிவின் விதிகளுக்கு அமைய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் 2025 டிசம்பர் 30 ஆம் திகதியிடப்பட்ட 2469/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட்ட இந்த விசாரணை ஆணைக்குழு, இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03 எனும் முகவரியில் நிறுவப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி பியசேன ரணசிங்க அவர்களின் தலைமையிலான இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இலங்கை கணக்காய்வாளர் சேவையின் (தரம் 1) ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர் செயற்படுகின்றனர்.
அரசியல் பதவிகளை வகித்த அல்லது வகித்துக் கொண்டிருப்பவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகளின் உத்தியோகத்தர்களாக சேவையாற்றிய அல்லது சேவையாற்றிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் சேவைகள் மற்றும் விநியோகங்களை மேற்கொண்ட நபர்கள் மற்றும் அரச அல்லது தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு எதிரான பாரிய குற்றச்சாட்டுகள் குறித்த பொதுமக்களின் முறைப்பாடுகள், தகவல்கள் மற்றும் ஏனைய விடயங்களைக் கோருவதும் பெற்றுக்கொள்வதும், இந்த பணிகளை முன்னெடுக்கும் போது மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்கு உட்படாவிட்டாலும் அல்லது மேற்குறிப்பிட்ட செயல்களுக்குப் புறம்பானதாக இருந்தாலும், விசாரணை ஆணைக்குழுவிற்கு தொடர்புபட்டதாக தோன்றும் குற்றம் அல்லது குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகள், தகவல்கள் மற்றும் ஏனைய விடயங்களைக் கோருவதும் பெற்றுக்கொள்வதும், அந்த முறைப்பாடுகள், தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவான, பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதும், குற்றங்கள் மற்றும் தவறான செயல்களைச் செய்தமைக்காகப் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் அது குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், இவ்வாறான குற்றங்கள் மற்றும் தவறான செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளையும் சமர்ப்பிப்பது இந்த விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையை மூன்று மாதங்களுக்குள்ளும், முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள்ளும் ஜனாதிபதி செயலாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
இது தொடர்பான ஏதேனும் எழுத்துமூல முறைப்பாடுகள் அல்லது தகவல்களைச் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் ஆணைக்குழுவின் செயலாளருக்கு “இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து முறைப்பாடுகளும் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்தகைய முறைப்பாடுகள் அல்லது தகவல்களை வழங்குபவர்களின் பெயர், முகவரி, தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் ஆகியவை அனைத்துச் சமர்ப்பிப்புகளிலும் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை எனின், அது தொடர்பில் ஆணைக் குழுவிடம் கோர முடியும்.
ஆணைக்குழுவிடம் வாய்மூலச் சமர்ப்பிப்புகளைச் செய்ய விரும்பும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், 011 2 301 735 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் 2026 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
