நுவரெலியாவில் உறைபனி பொழிவு

நுவரெலியாவில் உறைபனி பொழிவு

நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை (23) பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி (Frost) பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நுவரெலியா முழுவதும் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து கடும் துகள் உறைபனி சூழல் நிலவி வருகிறது.

இந்த துகள் பனிப்பொழிவின் காரணமாக மலையக மரக்கறி பயிர்ச்செய்கை, மலர் உற்பத்தி மற்றும் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதால், அவர்களின் வருகை எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.

குறிப்பாக நுவரெலியா குதிரைப் பந்தயத் திடல், கிரகரி வாவி கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் துகள் உறைபனி காணப்படுகிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலை நேரங்களில் நேரில் பார்வையிட்டு, புகைப்படங்கள் எடுத்தும் ஆச்சரியத்துடன் ரசித்தும் வருகின்றனர்.

இதனிடையே, இந்நாட்களில் மலையகப் பகுதிகளில் இரவு நேரங்களில் கடும் குளிரான காலநிலையும், பிற்பகல் நேரங்களில் கடும் வெப்பமான காலநிலையும் நிலவுகிறது. குறிப்பாக மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை குளிர் அதிகமாக உணரப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் இனிமையாக புகைப்படம் எடுத்து மகிழக்கூடிய இடமாகவும், பார்ப்பவர்களின் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் அமைதியான சூழலுடன் கூடிய பகுதியாகவும் நுவரெலியா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )