குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்: வெளியுறவுத்துறை கண்டனம்

குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்: வெளியுறவுத்துறை கண்டனம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (ஜன.22) அன்று குரோஷியா தலைநகரான ஸாகிரேப்பில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடந்துள்ளது.

சம்பவத்தன்று அத்துமீறி இந்திய தூதரகத்துக்குள் நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், அங்கு தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த இந்திய தேசிய கொடியினை அவர்கள் அகற்றியாகவும் தகவல்.

“இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சிலர், குரோஷியாவில் அமைந்துள்ள எங்கள் தூதரகத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்து, தாக்குதல் நடத்தி உள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தை குரோஷிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுடெல்லி மற்றும் ஸாகிரேப்பில் உள்ள குரோஷியா அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தி உள்ளோம்.

இது மாதிரியான செயல்கள் தாக்குதல் மேற்கொண்டவர்கள் பின்னணியை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. நிச்சயம் இது சட்ட ரீதியான நடவடிக்கைக்குள் அவர்களை உட்படுத்தும்” என வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே அடுத்த வாரம் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )