
இலங்கையின் சுற்றுலா வருமானத்திற்கு என்ன நடந்தது?
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் உத்தியோகபூர்வ வங்கி முறைமைக்குள் வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் 23.6 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ஆனால், மொத்த வருமானம் 3.22 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாத்திரமே உயர்ந்துள்ளது. ஒரு சுற்றுலாப் பயணி செலவிடும் சராசரித் தொகை கடந்த ஆண்டை விட 12 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
இலங்கையில் இயங்கும் சுமார் 40,000 உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் சுற்றுலாத்துறையின் பெரும் பகுதி வருமானம் உத்தியோகபூர்வ நிதி முறைமைக்கு வெளியே செல்கிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச நிகழ்நிலை முன்பதிவு தளங்கள் (Online Booking Platforms) மற்றும் வெளிநாட்டு கடன் அட்டைகள் (Credit Cards) மூலமான கொடுப்பனவுகள் இலங்கைக்கு வெளியே தீர்க்கப்படுவதால், அந்த வெளிநாட்டுச் செலாவணி மத்திய வங்கியின் கையிருப்பைச் சென்றடைவதில்லை. இது பாரிய வருமானக் கசிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வெறும் வருகை எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், அதனூடாகக் கிடைக்கும் வருமானம் மற்றும் செலாவணி கையிருப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான சுற்றுலாத்துறை கொள்கையை அரசு எப்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சுற்றுலாத்துறை முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான கட்டமைப்பு ரீதியான ஓட்டைகளை அடைக்காவிட்டால் நாடு பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் என எச்சரித்தார்.
