
“ஜெயலலிதா வாரிசு தீபாவிற்கு எதிரான வரி வசூல் நடவடிக்கைக்குத் தடை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தொடர்புடைய வருமான வரி வழக்கில், வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபாவிற்கு எதிராக வருமான வரித்துறை மேற்கொண்டு வந்த மீட்பு நடவடிக்கைகள் இதன் மூலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் வாரிசான தீபாவிற்கு சுமார் 13 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து தீபா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மற்றொரு வாரிசான தீபக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, வருமான வரித்துறை முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின்னர் 13 கோடி ரூபாய் என்றும் முன்னுக்குப் பின் முரணாக நோட்டீஸ் அனுப்பியதாக தீபா தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
சரியான தொகையைத் தெளிவுபடுத்தினால் அதைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் வருமான வரித்துறை இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாதது குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வரி பாக்கி தொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதுவரை வரி வசூல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
