
மத்திய மலைநாட்டை மீட்டெடுக்கப் புதிய தேசியக் கட்டமைப்பு: ஜனாதிபதி அதிரடி உத்தரவு
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும், அங்கு ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்ற பாதிப்புகளைச் சீரமைப்பதற்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பு ஒன்று நிறுவப்படும் என்று ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுமானங்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகள் தனித்தனியாகச் செயல்படுவது, மலைநாட்டை மீட்டெடுக்கும் பணிகளில் தடையை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்
சமீபத்தில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் காரணமாக மத்திய மலைநாட்டில் சுமார் 4,000 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
முறையற்ற கட்டுமானங்கள், திட்டமிடப்படாத விவசாய முறைகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததே இந்தப் பாதிப்புகளுக்கு முதன்மைக் காரணங்கள் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டியது ஒரு தேசியக் கடமை என்றும், அதற்கான விரைவான தேசியக் கொள்கை அவசியம் என்றும் அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட ஓர் அதிகார சபையை உருவாக்குமாறும், பணிகளைத் துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் பிரதிநிதிகள், இதற்கெனத் தனியான நிதி ஒன்றை உருவாக்குவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினர்.
மேலும், மத்திய மலைநாட்டை மீட்டெடுக்கும் இலங்கையின் முயற்சிக்குத் தங்களின் முழுமையான தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
