‘புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்’

‘புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்’

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் நடைபெறும்.

அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த புனித சின்னங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

புனித சின்னங்களை பெப்ரவரி 04 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்றிலிருந்து, ஹுனுபிட்டி கங்காராம விஹாரையில் பொது மக்களுக்கு புனித சின்னங்களை வழிபடும் வாய்ப்புக் கிடைக்கும்.

பெப்ரவரி 04 ஆம் திகதி இந்தியாவிலிருந்து புனித சின்னங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து அவை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு செல்லப்படும் வரை தேவையான வசதிகள், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் அவை தொடர்பான திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

புனித சின்னங்களை வழிபடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் கொழும்புக்கு வருகை தருவதால் அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என்று இங்கு கருத்துத் தெரிவித்த கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் தெரிவித்தார்.

புனித சின்னங்களை வழிபடுவதற்காக கங்காராம விகாரை வளாகம் எவ்வாறு தயார்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தேரர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

இது, இலங்கை மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் என்றும், நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கும் திட்டத்தில் ஒரு தனித்துவமான வாய்ப்பு என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்தார்.

கங்காராம விகாரையின் வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், கலாநிதி ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, மேல்மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உட்பட துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட ஏனைய பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்கள் மற்றும் இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )