
கினிகத்தேனையில் மாணவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய மாணவர்களுக்கு விளக்கமறியல்
கினிகத்தேனை பகுதியில் 11 ஆம் வகுப்பு மாணவியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் மற்றும் குற்றத்திற்கு உதவிய மற்றொருவர் உட்பட இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 18 ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கினிகத்தேனை, கோனாவல பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பாடசாலை மாணவி காதல் உறவில் இருந்ததாகவும்,
அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் அந்த மாணவியை ஒரு நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது காதலனும் அவரது நண்பர்களும் அவளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
தனது பாட்டியின் பராமரிப்பில் உள்ள சிறுமி, ஜனவரி 17 ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறி இரவில் திரும்பி வந்துள்ளார்.
பின்னர் பாட்டி சந்தேகத்தின் அடிப்படையில் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
விசாரணையைத் தொடர்ந்து, குறித்த மாணவி பொலிஸாரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
அவரது வாக்குமூலத்தின்படி, பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் குறித்த மாணவி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 16 மற்றும் 17 வயதுடைய மாணவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
