
தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்
தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார்.
2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வந்திருந்தார்.
அவருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்ருந்தது.
காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த தொடங்கினார். பொதுவாக, ஆளுநரின் உரை நேரலையாக வழங்கப்படும்.
எனினும், இம்முறை நேரலை வழங்கப்பட்டிருக்கவில்லை.
சட்டசபையில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார்.
அவர் தொடர்ந்து, நான்காவது ஆண்டாக உரை நிகழ்த்தாமல் வெளியேறியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார்.
அந்த உரையை மட்டும்தான் அவர் முழுமையாக வாசித்தார்.
அதன் பிறகு, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டதால், தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
