
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடையை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளங்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்த பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதனையடுத்து பிரதமர் தரப்பில் இருந்து சமிக்ஞை வந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இந்த வார இறுதியில், குழந்தைகள் நல்வாழ்வு மற்றும் பாடசாலைகள் சட்டமூலம் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட ஒரு வருடத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை சமூக ஊடக தளங்கள் நிறுத்த வேண்டும்.
இந்நிலையில், அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்பத் துறை, குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் கையடக்க தொலைபேசி கொள்கைகள் மற்றும் ஆய்வுகளின் போது அவை எவ்வளவு திறம்பட செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆஃப்ஸ்டெட் ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து முதல் 16 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோருக்கான திரை நேர வழிகாட்டுதலையும் அரசாங்கம் உருவாக்கும்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கான வழிகாட்டுதல் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்ட பின்னணியில் பிரித்தானியாவும் தற்போது இந்த வியடத்தில் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
