
போரை முடித்ததால்தான் ஜனாதிபதியால் யாழில் சுதந்திரமாக நடக்க முடிகிறது : மொட்டு கட்சி
“யாழில் தமிழ் மக்களை தூண்டிவிடும் விதத்திலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ சிங்கள மக்கள் விகாரைக்கு வருவது வழிபடுவதற்கு அல்ல – வைராக்கியத்தை விதைக்கவே” என்ற கருத்துமூலம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் வந்தால் கவனித்துக் கொள்ளுங்கள் என்ற அர்த்தத்தையே ஜனாதிபதி வழங்குவதற்கு முற்பட்டுள்ளார்.
சிங்கள மக்களை தூண்டுவதற்கு அல்ல, தமிழ் மக்களை தூண்டுவதற்காகவே தவறான கருத்தை விதைத்துள்ளார்.
ஓமந்தைக்கு அப்பால் செல்வதற்குரிய சுதந்திரம் மக்களுக்கு முன்பு இருக்கவில்லை. ஆனால் 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் இன்று ஜனாதிபதியால் சுதந்திரமாக நடமாட முடிகின்றது.” – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
