
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், நாட்டில் மனித உரிமை துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம் ‘ (Human Rights Watch) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, இது GSP+ வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை வழங்கிய மனித உரிமை வாக்குறுதிகளுக்கு முரணானது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், புதிய சட்டமூலத்திலும் அதற்கு நிகரான அடக்குமுறை ஏற்பாடுகளே காணப்படுவதாக அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் என்பதற்கு மிகப்பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளதால், இதனைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல்கள் தொடர வாய்ப்புள்ளதாகவும், அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் கருவியாக இது மாறக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
