
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் – இலங்கையில் இந்தியா இராஜதந்திர தலையீடுகைள மேற்கொள்ள வேண்டும்
இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக இந்தியா தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.
இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்ற போர்வையில், இலங்கையில் தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தி வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
புதிய அரசியலமைப்புக்காக இலங்கை அரசு முன்வைத்த கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசு என்ற கருத்தை மேலும் ஊக்குவிப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு “கடுமையான ஆபத்துகளை” ஏற்படுத்துகின்றன.
நாட்டில் உள்ள தமிழ் மக்களின் குறைகளை உண்மையிலேயே தீர்க்கும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறைக்காக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா ராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும்.
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க மாகாணங்களுக்கிடையில் அதிகாரத்தைப் பிரிக்கும் ஒரு கூட்டாட்சி முறையை புதிய அரசியலமைப்பில் சேர்க்க இந்தியா இலங்கை மீது ராஜதந்திர அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பிராந்திய அமைதியைப் பேணுவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு இதுபோன்ற தலையீடு புதிய மதிப்பை சேர்க்கும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
