ஈரான் போருக்கு தயாராகவே உள்ளது : எச்சரிக்கை விடுப்பு

ஈரான் போருக்கு தயாராகவே உள்ளது : எச்சரிக்கை விடுப்பு

“ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஈரான் இஸ்லாமியக் குடியரசு போரை நாடவில்லை; ஆனால், போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம்.

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும், சம உரிமைகளுடனும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

நாடு தழுவிய போராட்டங்களுக்குப் பிறகு நிலைமை தற்போது முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் போராட்டங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையிடுவதற்கு ஒரு சாக்குப்போக்கு அளிக்கும் வகையில் வன்முறை மற்றும் ரத்தக்களரியாக மாறியது” எனத் தெரிவித்தார்.

அப்பாஸ் அராக்சி இன்று தெஹ்ரானில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களிடம் பேசினார். நாட்டில் இணையம் துண்டிக்கப்பட்டிருந்தபோதிலும், செயல்பட அனுமதிக்கப்பட்ட கத்தார் நிதியுதவி பெறும் அல்ஜசீரா செயற்கைக்கோள் செய்தி நிறுவனம் அராக்சியின் கருத்துகளை ஒளிபரப்பியது.

ஈரான் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றுக்கு அந்நாட்டில் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டில் 490 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும், 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான ஹெச்ஆர்ஏஎன்ஏ (HRANA) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்பிரச்சினையைத் தூண்டிவிடுவதாக ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )