
டெல்லியில் 1,250 கோடி ரூபா சைபர் மோசடி
இந்தியாவின் டெல்லியில் கடந்த ஓராண்டில் மட்டும் மக்களிடம் இருந்து 1,250 கோடி ரூபாவை சைபர் மோசடி கும்பல் கொள்ளையடித்துள்ளது.
அண்மை காலமாக நிதி மோசடி அதிகரித்து வருவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் டெல்லி ரோகிணி பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் மற்றும் அவரது மனைவி டிஜிட்டல் கொடுப்பனவு முறையால்
14.85 கோடி ரூபாவை இழந்துள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் டெல்லி பிராந்தியத்தில் சைபர் மோசடி கும்பல் 1,100 கோடி ரூபாவை மோசடி செய்ததாகவும் இந்த கும்பலில் பெரும்பாலானோர் கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் தங்கியிருந்து, சீனக் கூட்டாளிகளின் கட்டளைப்படி செயற்படுவோர் என டெல்லி பொலிஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2025 ஆம் ஆண்டில் டெல்லி பிராந்தியத்தில் இந்த கும்பலால் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.1,250 கோடியாக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மோசடி செய்யப்பட்ட தொகையில் 10 சதவீதம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சைபர் மோசடி கும்பலால் மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் 20,000 கோடி ரூபாவாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இது ஒரு மாநிலத்தின் வரவு செலவு திட்டத்திற்கு இணையான தொகையாகும்” என்றார்.
