
கோரெட்டி புயலால் இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு பாதிப்பு
கோரெட்டி என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று நேற்றுமுன்தினமும், நேற்றும் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளை தாக்கியதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோரெட்டி புயல், மணிக்கு 99 மைல் வேகத்தில் தாக்கியதுடன், கடும் காற்று மற்றும் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால் 44,000 இற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.
கோரெட்டி புயல் காரணமாக இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில்தான் அதிகமான மின்தடைகள் ஏற்பட்டுள்ளன. அந்த பகுதியில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காற்று தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த புயல் காரணமாக பிரித்தானியாவில் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியா முழுவதும் பனி, பனிக்கட்டி மற்றும் மழைக்கான வானிலை எச்சரிக்கைகள் வானிலை ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் நாளை தினம்வரை அமுலில் இருக்கும்.
மான்செஸ்டரிலிருந்து ஸ்காட்லாந்தின் பெரும்பகுதி வரை நீடிக்கும் ஒரு மஞ்சள் எச்சரிக்கையும், பீட்டர்பரோ பகுதியிலிருந்து வடகிழக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பகுதி வரை நீடிக்கும் மற்றொரு மஞ்சள் எச்சரிக்கையும் இவ்வாறு அமுலில் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட வட அயர்லாந்தை உள்ளடக்கிய மூன்றாவது பனி எச்சரிக்கையும் தொடர்ந்து அமுல் இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
அத்துடன், இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதி முழுவதற்குமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், பாத் முதல் இங்கிலாந்தின் மேற்கு கடற்கரை முழுவதும் மற்றும் நியூகேஸில் வரை பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
