
187 பேருடன் அவசரமகாத தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்-229 (UL-229) இலக்க விமானம், பயணத்தின் நடுவே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகக் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஜனவரி 8, 2026) மாலை 6:44 மணியளவில் குவைத் நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், சுமார் 2 மணித்தியாலங்கள் 21 நிமிடப் பயணத்தின் பின்னர் மீண்டும் திருப்பிக் கொண்டுவரப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஹைட்ரோலிக் (Hydraulic) அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அவதானித்துள்ளார்.
உடனடியாக இது குறித்துக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்ததையடுத்து, விமானத்தைப் பாதுகாப்பாக மீண்டும் தரையிறக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி செயற்பட்ட விமானி, இரவு 9:05 மணியளவில் விமானத்தைக் கட்டுநாயக்கவில் பத்திரமாகத் தரையிறக்கினார்.
இந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 187 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான விமானத்தில் இருந்த பயணிகள், மாற்று விமானங்கள் மூலம் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்
