இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் இடையே பசுமை பொருளாதார வளர்ச்சி ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் இடையே பசுமை பொருளாதார வளர்ச்சி ஒப்பந்தம் கைச்சாத்து

“எக்ரிகிரீன் முன்முயற்சி – நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி” திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம், மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது.

நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாய்ந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும்.

மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ஆகியோர் கையொப்பமிட்டனர்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது.

பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது எனவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )