வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி உத்தரவு

வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி உத்தரவு

2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால்,  மக்கள் பல அபிவிருத்தி வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், சில சந்தர்ப்பங்களில், வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது ‘செலவு செய்யப்படாத நிதி’ என்று கணிக்கப்படும் சூழ்நிலை நாட்டில் இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்று எந்தவித தாமதமும் இன்றி தேவையான நிதியை உரிய முறையில்  பெற்றுக் கொள்வதற்கு அவசியமான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பாகும்.

அத்துடன், முன்மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )