
இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!
சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், புதிய கல்வி ஆண்டின் முதலாம் தவணைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவிய கடும் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களாகவும் சில பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், அனைத்துப் பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் தயார்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அனர்த்த நிலைமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்திலும் பாடசாலைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாணத்திலுள்ள மொத்தமான 1,507 பாடசாலைகளில், 1,494 பாடசாலைகளை நாளை முதல் வழமைப்போல் இயக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எஞ்சிய சில பாடசாலைகளில் மட்டும் துப்புரவுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பாடசாலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நிலச்சரிவு அபாயம் இன்னும் முழுமையாக நீங்காத பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது
