
இங்கிலாந்தில் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பு
இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் இளம் பருவத்தினரிடையே உயர் இரத்த அழுத்தம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடசாலை மாணவர்களின் உயர் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பதற்கான தேசிய திட்டம் ஒன்றுக்கு முன்னணி மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் வழக்கமான பரிசோதனைகள் எதுவும் செய்யப்படுவதில்லை.
இதனால் பிரச்சினையின் அளவு மற்றும் எந்தக் குழந்தைகளுக்கு அதிக உதவி தேவை என்பது குறித்து தெரியாமல் வைத்தியர்கள் தவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதன் மூலம் உறுப்பு சேதம் மற்றும் உயிருக்கு ஆபத்தான இருதய நோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயர் இரத்த அழுத்தம் ஒரு குழந்தைப் பருவப் பிரச்சினையாக இருக்கக்கூடும் என்பதை மக்கள் உணரவில்லை என குழந்தை சிறுநீரக வைத்தியர் பேராசிரியர் மணீஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆரோக்கியமற்ற குழந்தைப் பருவ மக்கள் தொகை அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் அவர்களின் வயதுவந்த வாழ்க்கையின் ஆரம்பத்தில் சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவற்றுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இங்கிலாந்தில் அகால மரணத்திற்கு உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணமாகும் என ஸ்ட்ரோக் அசோசியேஷனின் தலைமை நிர்வாகி ஜூலியட் பௌவேரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
