
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க நடவடிக்கை
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, அரசாங்கப் பணிகளை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் அனைத்துப் படிவங்களையும் பொதுமக்கள் மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கான வசதி எதிர்வரும் மாதத்தில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு பிரஜை தனது சொந்த மொழியைக் கேட்கும் போதும், சட்டத்தால் சமமாகப் பாதுகாக்கப்படும் போதும், மற்றும் ஆள் அடையாளம் கவனத்தில் கொள்ளாது பாதுகாக்கப்படுவதை உணரும்போதும் அதனை செயல்பாடாக வெளிப்படுத்துவது தேசிய ஒருமைப்பாடாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஊழியர்கள் தமது கடமைகளை 2026 புத்தாண்டில் சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் வகையில் நேற்று (01) காலை அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டார்.
நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த முப்படைகளின் போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வும், அரச சேவைக்கான ஊழியர்களின் சத்தியப்பிரமாணமும் இதன்போது இடம்பெற்றன. ஜனவரி மாதம் முதலாம் திகதி வெறும் நாட்காட்டியில் ஒரு நாள் மட்டுமல்ல. நாம் வந்த பாதையை நேர்மையாகத் திரும்பிப் பார்த்து, எப்படி முன்னேறுவது என்பதை அமைதியாக முடிவு செய்ய வேண்டிய தருணம் என்று குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் கடந்து வந்த ஆண்டு எளிதான ஒன்றல்ல. அது ஒரு சவாலான ஒன்று. ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட தித்வா சூறாவளியின் அனுபவம் எமது கட்டமைப்புகள், நிருவகங்கள் மற்றும் எமது மக்களை பெரும் சோதனைக்கு உட்படுத்தியது. இலங்கையர்களின் மீண்டெழும் தன்மை முதலானவற்றின் சக்தியை இது வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பேரழிவு ஏற்படும் போது, நாட்டு மக்கள் பிளவுபடவில்லை என்பதை நாம் அனுபவ ரீதியாக இதன் ஊடாக கண்டறிந்தோம். இனம், பிராந்தியவாதம், மொழி, மதம் மற்றும் அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், இலங்கையர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துள்ளோம், வளங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளோம், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்துள்ளோம், ஒரு சிறந்த அமைப்புக்கான நம்பிக்கையுடன் ஒன்றிணைந்துள்ளோம். அந்தக் கூட்டு வலிமையே நமது தேசத்தின் அடித்தளம்.
