
மாகாண சபைத் தேர்தலை நடாத்துங்கள் – அநுர அரசிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து
ஜனாதிபதி அநுர பதவிக்கு வருவதற்கு முன்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறுபட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய அரசு பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், இழுபறிகளில் காலம் கடத்தப்படுகின்றதே தவிர, தேர்தல் வைப்பதற்கான எந்த உத்தேசமும் இருப்பதாகத் தெரியவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு, “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், குறைந்த பட்சம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதனூடாக மாத்திரமே அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கையிலெடுத்து, இயலக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு – கிழக்கில் உருவாக்க முடியும்.
அரசு பதவிக்கு வந்து புதிய அரசியல் சாசனத்தைப் பற்றிப் பேசினாலும்கூட, அந்த அரசியல் சாசனம் வருமா? வராதா? அவ்வாறான அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரமான நிலைத்திருப்பதான தீர்வு எட்டப்படுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு இன்று இருக்கக்கூடிய சட்டபூர்வமான பொறிமுறை என்பது மாகாண சபை மாத்திரமே. ஆகவே, அந்த மாகாண சபை அதிகாரங்களைக் கையிலெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்தியது மாத்திரமல்லாமல், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கககூடிய ரெலோ, புளொட், சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகளுடன் இணைந்து தேர்தலை வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கின் பல மாவட்டங்களில் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றது.
இன்று தமிழரசுக் கட்சியும் இணைந்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற பொது விடயத்தில் ஒருமித்துச் செயற்பட ஆரம்பித்திருக்கின்றோம்.
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கரைத் தமிழ் கட்சிகள் சந்தித்தபோது, மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு இந்தியா கொடுக்க வேண்டும் என்று கோரியபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதனை ஏற்றுக்கொண்டார்.
ஆகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சகல கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதன் மூலம் இந்த விடயத்தில் நாங்கள் ஒன்றாகவே இருக்கின்றோம் என்பதை இந்தியாவுக்கும் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
ஈழ விடுதலைக்கான மிகப் பலமான ஆயுதப் போராட்டம் ஒன்றை முப்பது ஆண்டுகள் நடத்தி பல்வேறுபட்ட தியாகங்களையும் அழிவுகளையும் சந்தித்த தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிந்துபோகும் நிலைக்கு நாங்கள் இடம்கொடுக்கக்கூடாது.
ஆகவே, கால சூழ்நிலைக்கேற்ப, மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மிகவலிமையாக இருக்கின்றோம் என்ற கற்பனையிலும் பேரம்பேசும் ஆற்றலில் இருக்கின்றோம் என்ற கற்பனையிலும் மிதந்து யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டு எல்லாம் உடனடியாகக் கிடைத்துவிடும் என்று செயற்படுவது புத்திசாலித்தனம் அல்ல.
போராட்ட காலத்திலும் அதன் பின்னரான இன்றைய காலம் வரையிலும் இந்தியாவை ஆக்ரோஷமாக எதிர்த்து வந்த பலரும் இன்றுதான் இந்தியாவின் நட்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.
எமக்கு அண்மையில் இருக்கக்கூடியதும் எட்டு கோடி தமிழ் மக்களையும் நூற்றுநாற்பது கோடி மக்களையும் கொண்ட உலக வல்லரசுகளில் மதிக்கக்கூடிய ஒன்றான இந்தியாவின் நட்பு அவசியம் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மிக நீண்டகாலமாவே வலியுறுத்தி வந்திருக்கின்றது.
இன்று அதனை பல்வேறு தமிழ்த்தரப்புகள் புரிந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்றுள்ளது.
