
இங்கிலாந்தில் புத்தாண்டு தினத்தில் அதிகளவு பனிப் பொழிவு
இங்கிலாந்தில் புத்தாண்டு தினத்தில் அதிகளவு பனிப் பொழிவு காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, ஜனவரி முதலாம் திகதி காலை ஆறு மணி முதல் இரண்டாம் திகதி இரவு 11.59 வரை பனிப் பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்தப் பகுதியில் அடிக்கடி மற்றும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால் பயணத் தடை ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக உயர்ந்த பாதைகள் மற்றும் மலைகளில் 30 சென்றி மீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கையால் சூழப்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் காற்று மற்றும் வலுவான வடக்கு காற்று இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளுக்கும் குளிர் அல்லது மிகவும் குளிரான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
புத்தாண்டு தினத்திலும் அதற்குப் பின்னரும் வடக்கு ஸ்காட்லாந்திற்கு பனிப் பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனவரி ஐந்தாம் திகதி வரை இங்கிலாந்தின் வடகிழக்கு மற்றும் வடமேற்கை உள்ளடக்கிய சுகாதாரத் துறைக்கு பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் அம்பர் குளிர் சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பிராந்தியங்கள் முழுவதும் சுகாதார சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பநிலை குறைவது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அதிக ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, பயண தாமதங்கள் போன்ற வெளிப்புற காரணிகளால் பணியாளர்கள் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
