
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பாதிப்பு
பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகள் தற்போது செயல்படாமல் இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தேசிய மின் கட்டம் 600 மெகாவாட் உற்பத்தி திறனை இழந்துள்ளதாக மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, இது தேசிய மின் கட்டத்திற்கு 300 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகிறது.
வழக்கமான பராமரிப்பு காரணமாக லக்விஜய மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி நவம்பர் மூன்றாம் திகதி செயல்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தொழில்நுட்பக் கோளாறால் டிசம்பர் 20 ஆம் தினதி மற்றொரு மின் பிறப்பாக்கி செயழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மின் பிறப்பாக்கிகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதுடன், ஜனவரி முதல் வாரத்தில் அவைகளை மீண்டும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீர் மின் உற்பத்தி வெற்றிகரமாகத் தொடர்வதால், நாளாந்த மின்சார விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை என்று இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
