தமிழக மீனவர் விவகாரம் – மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்

தமிழக மீனவர் விவகாரம் – மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக இராஜதந்திர ரீதியாக தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய மீன்பிடி நீர்நிலைகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதிய சம்பவத்தை அடுத்து ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

டிசம்பர் 27 ஆம் திகதி மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்ற மீனவர்கள், மறுநாள் கடல் எல்லையைத் தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி ஆபத்தான முறையில் நிகழ்ந்து வருவதாகவும், தமிழக கடற்கரையில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ச்சியான கைதுகள் மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்கள் பொருளாதார நெருக்கடியிலும் நிச்சயமற்ற தன்மையிலும் தள்ளப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் பலர் கடலை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.

கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள தரவுகளின்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 61 மீனவர்களும் 248 மீன்பிடி படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற கைதுகளைத் தடுக்க பயனுள்ள வழிமுறைகளை உருவாக்குவதற்கும், பொருத்தமான இராஜதந்திர வழிகள் மூலம் இந்த விடயத்தை அவசரமாக எடுக்குமாறு மத்திய அரசை முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் தமிழக மீனவர்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )