
தாய்லாந்து , கம்போடியா இடையே உடனடி போர்நிறுத்தம் – வெளியான கூட்டு அறிவிப்பு
தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் அறிவித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை இரு நாடுகளும் சனிக்கிழமை கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளன. இதன்படி, இன்ற நண்பகல் முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர்நிறுத்தம் 72 மணி நேரம் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் எல்லைப் பகுதிகளில் அனைத்து துருப்புகளின் நகர்வுகளும் நிறுத்தப்படும்.
இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
இதேவேளை, இந்த எல்லை மோதல்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
போர்நிறுத்தம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டால், தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
இந்த விடுதலை, கோலாலம்பூர் பிரகடனத்தின் அடிப்படையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், பொதுமக்கள் சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் படை முன்னேற்றங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
