
டித்வா பேரிடர் – கண்டியில் ஐந்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அறிவிப்பு
“டித்வா” சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரத்தின் எல்லையை ஒட்டிய பமுனுபுர பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கண்டி மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் உதவி இயக்குநர் எல்.ஏ.கே. ரணவீர கூறுகையில், அந்தப் பகுதியில் பெரும் பகுதிகள் கிட்டத்தட்ட 40 அடி ஆழத்திற்கு சரிந்து, கிராமங்கள் மனித வாழ்விற்குப் பாதுகாப்பற்றதாக மாறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
உடத்தாவ, நெலும் மாலை, கல நாக, மட கெலே மற்றும் உட கல் தெபொக்காவ ஆகிய கிராமங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
உடத்தாவ கிராமத்தில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முற்றிலுமாக புதைந்துவிட்டதாகவும், இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இடிபாடுகளுக்கு அடியில் 30 முதல் 40 அடி ஆழத்தில் பல உடல்கள் சிக்கியுள்ளதாக நம்பப்படுவதால், காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட கிராமங்களில் அகழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எல்.ஏ.கே. ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் அனுமதிக்கப்படாது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) இயக்குநர் ஜெனரல் பொறியாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார்.
விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மண்டலங்களிலிருந்து குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கால நிலச்சரிவு அபாயங்களை மதிப்பிடுவதற்கு, மேம்பட்ட 3D தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், நில அடையாளத் திட்டம் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் பீடத்தின் மூத்த பேராசிரியர் ரங்கிகா ஹல்வதுர தலைமையிலான 3D கணக்கெடுப்பு, யஹங்கல மலை மற்றும் ஹசலக உடத்தாவ மற்றும் நெலும் மாலை உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களின் சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியதாக ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் யஹங்கல மலையில் இரசாயனப் பயன்பாடு மற்றும் துளையிடுதலுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன, இது சட்டவிரோத புதையல் வேட்டையுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
இது மலை அமைப்பை பலவீனப்படுத்தியிருக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்ட வலுவான அதிர்ச்சி அலைகள் நிலச்சரிவுக்கு பங்களித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மினிப்பே பிரதேச செயலாளரின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, எதிர்கால பேரிடர் தடுப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும், அறிக்கை ஏற்கனவே பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ஹல்வதுரா கூறினார்.
