பண்டிகைக்கால பாதுகாப்பு – சிறப்பு நடவடிக்கை பணியகம் உருவாக்கம்

பண்டிகைக்கால பாதுகாப்பு – சிறப்பு நடவடிக்கை பணியகம் உருவாக்கம்

பண்டிகைக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நகரங்கள், வழிபாட்டு இடங்கள், விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு நடவடிக்கை பணியகம் நிறுவப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முக்கிய நகரங்கள், வழிபாட்டு இடங்கள், முன்னணி விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக போக்குவரத்து மற்றும் வணிகம் இடம்பெறும் நகர்ப்புறங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபர் சிறப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகளும் காவல்யினரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் 2,500 கூடுதல் காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல்களைக் கண்காணித்துத் தடுக்க, பரபரப்பான வணிக மையங்களுக்கு அருகில் புலனாய்வு அதிகாரிகளும், சாதாரண உடையணிந்த காவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நத்தார் வழிபாடுகள் நிகழ்ச்சிகள் நடைபெறும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தேவைப்படும் போது காவல்துறைக்கு உதவ இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.

இதற்கிடையில், பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை பணியகம், பண்டிகைக் காலம் முடியும் வரை செயல்படும் என்றும் இது முப்படைகள் மற்றும் காவல்துறையினரிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும் என்றும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )