
வெளிநாட்டு உதவிகளின் மேலாண்மை, விநியோக முறைகளை மேலும் வலுப்படுத்த திட்டம்
வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) ஐந்தாவது கூட்டம், நேற்று (டிசம்பர் 23) பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் மேலாண்மை, ஒருங்கிணைப்பு மற்றும் பயனுள்ள விநியோக முறைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தபட்டது.
கூட்டத்தின் போது, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் (NDRSC) மேலதிக செயலாளர் மற்றும் அதிகாரிகள், வெளிநாட்டு நிவாரண உதவிகளுக்கான களஞ்சிய மேலாண்மை பொறுப்புகளை ஒதுக்குதல், மேலும் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் கண்காணிப்பிற்காக உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சரக்கு முகாமைத்துவ அமைப்பை முறையாக கையளித்து பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, பிரதி பாதுகாப்பு அமைச்சர், தொடர்புடைய செயல்பாட்டு மற்றும் நிர்வாக சவால்களை ஆராய்ந்து, அவற்றை உடனடியாக தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மேலும், மாவட்ட செயலாளர்களின் மூலம் தேவைகள் மதிப்பீடு செய்து, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நிவாரண உதவிகளை ஒழுங்குமுறைப்படுத்தி விநியோகிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. வேயங்கொடை களஞ்சியத்திற்கு மருத்துவ மற்றும் முதலுதவி பொருட்களை அனுப்புவது தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன், ஏனைய நிவாரணப் பொருட்கள் குறிப்பிடப்பட்ட களஞ்சிய நிலையங்களுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல், களஞ்சியங்களில் போதுமான பணியாளர்களை நியமித்தல் மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வெளிநாட்டு நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு காலதாமதமின்றி, திறம்பட மற்றும் வெளிப்படையான முறையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தொடர்புடைய அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான முன்னேற்ற அறிக்கைகள் வழங்கும் நடைமுறைகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
இக்கூட்டத்தில், குழு உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
