
கடற்கொள்ளை ஆதரவாளர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை – வெனிசுலாவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
முற்றுகைகள் மற்றும் கடற்கொள்ளை நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் அல்லது நிதியளிப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
வெனிசுலாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கைகளை சட்டவிரோத கடற்கொள்ளை செயல்கள் என வெனிசுலா அரசு கண்டித்துள்ளது.
இந்தச் சட்டம் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் கியூசெப் அலெஸாண்ட்ரெல்லோ (Giuseppe Alessandrello) தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கப்பல்களை கைப்பற்றியதைாகவும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தியதாகவும் வெனிசுலா குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச நீரில் எண்ணெய் கப்பல்களைக் கைப்பற்றுவது சட்டபூர்வமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சில தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்றும் விமர்சனங்கள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் வெனிசுலா பிரதிநிதி சாமுவேல் மோன்காடா, “அச்சுறுத்தல் வெனிசுலா அல்ல, அமெரிக்க அரசாங்கமே” என்று கூறினார்.
இதேவேளை, அமெரிக்காவின் நடவடிக்கைகளை சீனாவும் ரஷ்யாவும் விமர்சித்துள்ளன.
ரஷ்ய தூதுவர் வாசிலி நெபென்சியா, இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம் என்றும் எச்சரித்தார்.
