
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வன்முறை – 58 பொலிஸ் அதிகாரிகள் காயம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தால் 58 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
ஆங்லாங் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாக பெரும் கலவரம் ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அசாம் மாநிலத்தில் கர்பி (Karbi)பழங்குடியினரின் அமைப்புகளின் தன்னாட்சி கவுன்சில் எல்லைக்கு உட்பட்ட, அரசு மேய்ச்சல் நிலங்களில் பிஹார் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பலர் குடியேறி உள்ளனர்.
அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என கர்பி பழங்குடியினத்தவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் வன்முறையாக மாறியுள்ளது.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு கர்பி ஆங்லாங்கின் பெலங்பி என்ற பகுதியில் கடந்த 2 வாரங்களாக பழங்குடியினர் 9 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக பொலிஸார் குவாஹாட்டிக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் கோபம் அடைந்த பழங்குடியினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.
கர்பி பகுதிகளில் இருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டன.மேலும் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
