
100 நாள் வேலை திட்டம் குறித்த புதிய சட்டத்தை திரும்பப் பெற வைப்போம் – ஸ்டாலின் உ றுதி
நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை, மக்கள் சக்தியுடன் திரும்பப் பெற வைப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் 694 கோடி ரூபா மதிப்பிலான 33 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, 45,477 பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்,
கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்களில் மேற்கொள்ளும் அகழாய்வுகளுக்கு, மத்திய பாஜக அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் நடைபெறக் கூடாது, மீறி நடந்தாலும், முடிவுகள் வெளியே வரக் கூடாது என்பதுதான் அவர்களது எண்ணம்.இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைபவர்களுக்கு, நமது ஆய்வுகள் தெரிவதில்லை. நம் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது.
ஈராயிரம் ஆண்டுகால சண்டையில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம். அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்து வருகிறோம் .2021 மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரை பணிகளைத் தொடங்கவில்லை.
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு, தற்போது உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.
