
சென்னையில் பனிமூட்டம் – விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு
சென்னை உள்ளிட்ட புறநகரங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் நேரங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றது.
இதனால் சாரதிகள் உள்ளிட்ட பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை என ஏழு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஏழு விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் இயக்கம் குறித்து பயணிகள் அந்ததந்த நிறுவனங்களிடம் தெளிவாக அறிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரயில்களின் வருகையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காலை நேரத்தில் பணிக்குச் செல்லும் பொது மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
