கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பர பகுதியில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவு – பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன
இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், உடுதும்பர பகுதியில் அதிக மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பர பகுதியில் 201 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
உடுதும்பர போத்தபிட்டியவில் இரண்டாவது அதிகபட்ச மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது, அங்கு 155 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதே நேரத்தில், இன்று காலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், 34 முக்கிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ, ராஜாங்கனை, நாச்சதுவ மற்றும் அங்கமுவ ஆகிய நீர் நிலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் உள்ள பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள சேனநாயக்க சமுத்திரத்தில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கலாவெவவின் இரண்டு வான் கதவுகளும் தலா ஆறு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை தலா ஐந்து அடிக்கும் இரண்டு வான் கதவுகளை தலா நான்கு அடிக்கும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாச்சதுவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா நான்கு அடிக்கும், மூன்று வான் கதவுகள் தலா இரண்டு அடிக்கும் திறக்கப்பட்டுள்ளன.
அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடிக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, மண்சரிவு உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக பதுளை, மாத்தளை, கிளிநொச்சி, கேகாலை மற்றும் அனுராதபுரத்தில் உள்ள வீதிகளின் சில பகுதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொலன்னறுவையில் உள்ள சுங்கவில – சோமாவதிய வீதி வெள்ளம் காரணமாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
