
பேரிடரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஐ.நா. உதவ வேண்டும்: சஜித் கோரிக்கை
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சிற்கும் (Mark Andre Franche) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (17) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், சமகால இலங்கையின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் நாட்டில் எழுந்துள்ள பன்முக பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்சிடம் எடுத்துரைத்தார்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் பெற்றுத் தர முடியுமான கூடிய ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.
