
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மிக உயரிய ‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி கௌவுரவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்த பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவுக்குச் சென்றார்.
அந்நாட்டுப் பிரதமர் அபி அகமது அலி, பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். இதையடுத்து, அடிஸ் அபாபாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்துக்கு இருவரும் ஒரே காரில் சென்றனர். காரை, எத்தியோப்பியா பிரதமர் ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, எத்தியோப்பியாவின் மிக உயரிய ‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அபி அகமது அலி கவுரவித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான மற்றும் வளமான நாகரிகங்களில் ஒன்றால் கௌவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமைக்குரிய விடயம். அனைத்து இந்தியர்கள் சார்பாக இந்த மரியாதையை நான் மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.
பின்னர் இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதை வழங்கிய எத்தியோப்பிய மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பிரதமர் அபி அகமது அலிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எத்தியோபியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தியா உறுதி பூண்டுள்ளது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகளில் இது 28-வது விருதாகும். இதையடுத்து, எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
https://oruvan.com/oruvannewslogin/?loggedout=true&wp_lang=en_US
