
பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – சுற்றறிக்கை வெளியீடு
வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக தங்கள் வசிப்பிடத்திலிருந்து பணியிடத்திற்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டு பணிக்கு வர மூகமளிக்க முடியாத அதிகாரிகளுக்கு இந்த சிறப்பு விடுப்பு வழங்கப்பட உள்ளது.
அத்தகைய சிறப்பு விடுமுறையைப் பெறுவதற்கு, பணிக்கு சமூகமளிக்க இயலாமைக்கான காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட, அவரது பகுதியின் கிராம அலுவலரின் பரிந்துரையுடன், நிறுவனத் தலைவரிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் சரியான தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைந்தால் மட்டுமே, சேவைக்கு சமூகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான விசேட விடுமுறையை அங்கீகரிப்பதற்காக திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விடுமுறைகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
