
நாளை முதல் மழை தீவிரமடையும் – மண் சரிவு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
மழையுடன் கூடிய காலநிலை நீடித்துள்ள நிலையில் மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை முதல் மழை தீவிரமைடையும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மழை பெய்யும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, பேரிடருக்கு பின்னர் இராணுவத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ திருகோணமலைப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
நீலபொல பகுதியில் இராணுவத் துருப்புக்களால் மேற்கொள்ளப்படும் சாலை புனரமைப்பு நடவடிக்கைகளை இராணுவத் தளபதி பார்வையிட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை வந்த ஐக்கிய அரபு இரச்சியத்தின் நிவாரணக் குழு தனது நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
